1928ம் ஆண்டு தனது ஆய்வகத்தில், ஸ்டாபிலோகோக்கி (staphylococci) என்ற பாக்டீரியாவை வைத்து, தொற்று நோய்கள் குறித்த மிகப் பெரிய ஆராய்ச்சியை ஃபிளெமிங் செய்து கொண்டிருந்தார். வழக்கமாக ஆய்வுக் கூடத்தை விட்டு வெளியேறும் போது, அனைத்து கருவிகள் மற்றும் குடுவைகளை சுத்தம் செய்து விட்டுத்தான் கிளம்புவார். ஆனால் ஒருநாள் சில குடுவைகளை சுத்தம் செய்யாமலேயே ஃபிளெமிங் கிளம்பி விட்டார்.
அதன் பின் அந்த ஆய்வகத்தை பல நாட்கள் அவர் பயன்படுத்தவில்லை. ஒருநாள் மீண்டும் ஆராய்ச்சியைத் துவக்குவதற்காக அந்த ஆய்வுக் கூடத்துக்கு சென்றார். நுண்ணுயிர்கள் வைத்திருந்த குடுவையை தன் அலட்சியத்தால் சுத்தம் செய்யாமல் விட்டதால், அது கெட்டுப் போய் பூஞ்சை பிடித்திருந்ததைக் கண்டார். இனி அதைப் பயன்படுத்த முடியாது என்பதால் வீசியெறிய முற்பட்டார். ஆனால் இங்கு தான் ஃபிளெமிங்கின் விஞ்ஞானி மூளை விழித்துக் கொண்டது. குடுவையை உற்றுப் பார்த்தார். அதன் ஒரு சில பகுதிகள் மட்டும் கெட்டுப்போகாமல் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ஆனால் அந்தப் பகுதிகளைச் சுற்றியும் பூஞ்சை பிடித்திருந்ததால், ஃபிளெமிங்கின் ஆய்வகம் பரபரப்பானது.
அதை வைத்து பல கோணங்களில் ஆய்வு செய்த ஃபிளெமிங், பாக்டீரியாக்கள் பரவுவதை சில பூஞ்சைகள் தடுத்திருப்பதைக் கண்டார். இறுதியில் பென்சிலியம் என்ற அந்த பூஞ்சைகளில் இருந்து பென்சிலின் மருந்தை அவர் கண்டுபிடித்தார். ஹோவர்டு ஃபுளோரே என்ற விஞ்ஞானியின் தலைமையிலான மருத்துவக் குழு, இந்த மருந்தை முதலில் உற்பத்தி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
ஃபிளெமிங்கின் அலட்சியத்தால் அவருக்கு பரிசாக வெற்றி கிடைத்தது. இது நூற்றுக்கு ஒரு சதவீதம் தான். மீதி 99 சதவீதம் பேருக்கு அலட்சியத்தால் அவதிகள் தான் பரிசாகக் கிடைத்திருக்கும்...கிடைக்கிறது... கிடைக்கும்!