ரப்பர் கண்டுபிடிக்கப்பட்ட கதை சுவாரஸியமானது.

 'அழித்தல்' என்ற வார்த்தையை யாரும் விரும்புவதில்லை. இதற்கு ரப்பர் மட்டும் விதிவிலக்கு. பென்சில் பயன்படுத்தும் அனைவரும் ரப்பர் வைத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. பல வண்ணங்களில், வடிவங்களில் காணப்படும் அழிக்கும் ரப்பர் கண்டுபிடிக்கப்பட்ட கதை சுவாரஸியமானது. 

18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் அமெரிக்காவின் காட்டுப் பகுதியில் வசித்த பழங்குடியினர், ஒரு வகை மரத்திலிருந்து கிடைக்கும் கெட்டியான பாலை உருண்டையாக்கி அதை  வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அதே பாலை தங்கள் உடலில் பூசி, அதன் மீது இறகுகளை ஒட்டிக் கொண்டனர். 

அப்பகுதியில் சுற்றுலா சென்ற பிரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் இதைக் கண்டு ஆச்சரியம் கொண்டதோடு, வெளி உலகுக்கு தெரியப்படுத்தினார். அதன் பின் 1770ம் ஆண்டு பிரபல விஞ்ஞானி சர் ஜோசப் பிரீஸ்ட்லே, இந்த மரத்திலிருந்து பாலை எடுத்து, அதன் மூலக்கூறுகளை ஆராய்ந்து, ரப்பரின் குணங்களை வெளிப்படுதினார்.

அதே ஆண்டு, ரப்பர் துண்டுகளை வைத்து பிரிட்டன் பொறியாளர் எட்வர்டு நெய்மே ஆய்வுகள் செய்தார். சில குறிப்புகளை பென்சிலால் எழுதும் போது தவறுகள் ஏற்படவே, அதை அழிக்க ரொட்டித் தூள்களை எடுப்பதற்கு பதிலாக (அந்தக் காலத்தில் பென்சில் எழுத்துக்களை அழிக்க ரொட்டித் தூள்களைப் பயன்படுத்துவர்) தவறுதலாக ரப்பர் துண்டுகளை எடுத்து அழித்தார். பென்சில் எழுத்துக்கள் சுத்தமாகவும் விரைவாகவும் அழிப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டு, உடனே களத்தில் இறங்கினார். பென்சில் எழுத்துக்களை அழிக்கும் ரப்பர் துண்டுகளை சந்தைக்கு அறிமுகம் செய்தார்.

உணவைப் போலவே, ரப்பரும் சில நாட்களில் கெட்டுப் போகும் தன்மை கொண்டது. இதனால் ரப்பரை பல நாட்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு தீர்வைக் கண்டுபிடித்தார் சார்லஸ் குட்இயர். 1839ம் ஆண்டு கந்தகத்தைப் பயன்படுத்தி ரப்பரை கெட்டியாக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் எத்தனை ஆண்டுகளானாலும், கெட்டுப் போகாத ரப்பர் ரப்பர் நமக்குக் கிடைத்துள்ளது.