சக்கரங்கள்
------------------------
ஆக்கம்: சுதாகர் பாண்டியன்
மனித உடல் கண்களுக்கு புலனாகும் ஸ்தூல சரீரம் மற்றும் புலனாகாத சூக்கும சரீரமும் கொண்டது. சக்கரங்கள் என்பவை மனித உடலின் சூக்கும சரீரத்தில் அமைந்த சக்தி மையங்களாகும். இவை மொத்தம் ஏழு, அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், ம்ணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சகஸ்ரதளம் என்பவை ஆகும். இது முதுகெலும்புத்தண்டின் கீழிருந்து மேல் நோக்கி நெடுகிலும் வரிசையாக அமைந்துள்ளது. இந்த சக்கரங்கள் உண்மையில் ஸ்தூல உடலில் கிடையாது, ஆனால் சூக்கும உடலில் உண்டு.
மனிதனின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் இந்த சக்கரங்கள் கட்டுப்படுத்துகின்றன. இது ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான தன்மைகளையும், உணர்வுகளையும் மனதுக்கும்,உடலுக்கும் அளிக்கக்கூடியவையாகும்.
இந்த அதிசய சக்கரங்களைப் பற்றி பார்ப்போம்,
ஒவ்வொரு சக்கரமும் தாமரை வடிவினைக்கொண்டவை, சாதாரணமாக மலராத நிலையில் உள்ளன, யோகப் பயிற்சியின் மூலம் குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இவை மலர்கின்றன.
ஒவ்வொரு சக்கரத்திற்கும் பல இதழ்கள் உண்டு. இந்த இதழ்களின் எண்ணிக்கை ஆரம்ப நிலையிலிருந்து, அதாவது மூலாதாரத்திலிருந்து படிப்படியாக மோல்நோக்கி அதிகரிக்கும். ஒவ்வொரு சக்கரங்கத்திற்க்கும் ஒரு ஆண் தெய்வம், மந்திரம், நிறம் ஆகியவை உண்டு. மேலும் சக்கரத்திலுள்ள தாமரையின் ஒவ்வொரு இதழுக்கும் ஒரு மந்திர எழுத்து இருக்கிறது. பஞ்ச பூதங்களான நிலம்,நீர்,காற்று,நெருப்பு மற்றும் ஆகாயம் இவற்றுடன் ஒவவொறு சக்கரமும் தொடர்பு கொண்டுள்ளது.
இவ்வாறு ஆண் தன்மையுடைய இச்சக்கரத்தில் பெண் வடிவாகிய குண்டலினி சக்தியானது பாயும்போது அதன் பெயர் சக்கரத்திற்கு ஏற்றார்போல் மாறுபடுகின்றது.அதுவே ஒவ்வொரு சக்கரத்தின் பெண் தெய்வமாகும். ஆண் வடிவாகிய சக்கரத்தில் பெண் வடிவாகிய குண்டலினி சக்தியானது சேர்ந்து உடலுக்கும், மனதுக்கும் புதிய சக்திகளையும், மாற்றங்களையும் தருகின்றன. இதுவே யோகத்தினால் கிடைக்கும் பயன் ஆகும்.
சூக்கும உடலில் காணப்படும் இந்த சக்கரத்தின் இருப்பிடங்களை ஸ்தூல உடலுடன் தொடர்பு படுத்தி தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். அப்போதுதான் மிகச்சரியாக குண்டலினி யோக தியானத்தினை பிழையின்றி செய்யமுடியும்.
ஆண்களுக்கு மூத்திரத்துவாரத்துக்கும் மலத்துவாரத்துக்கும் உள்ள இடைவெளியிலும், பெண்களுக்கு பெண்குறியின் உட்புறம் கருப்பைவாசல் அருகிலும் மூலாதாரச்சக்கரமானது அமைந்துள்ளது.
மூலாதாரச்சக்கரத்திற்கு சற்று ஏற்புறமாக,சுமார் நான்கு விரல் மேலே சுவாதிஷ்டானம் உள்ளது.
மூன்றாவது சக்கரமான ம்ணிபூரகம் நாபியின் பின்னே முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.
இதன் பின்னால் இதயத்துக்கு நேர் பின்புறம் முதுகுத்தண்டில் அநாகத சக்கரமானது அமைந்துள்ளது.
விசுக்தி சக்கரம் மைய கழுத்துக்குப் பின்னால் அதே முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.
ஆக்ஞை சக்கரம் முதுகுத்தண்டின் உச்சியில், இரு புருவங்களுக்கும் இடையே நேர் பின்புறம் அமந்துள்ளது.
கடைசியில் சகஸ்ரதளமானது தலையின் மேற்புறம் கவிழ்ந்த நிலையில் ஆயிரம் இதழ்களுடன் காணப்படுகிறது.
மேலும் மூலாதாரமானது நிலத்துடனும், சுவாதிஷ்டானம் நீருடனும், மணிபூரகம் காற்றுடனும், அநாகதம் நெருப்புடனும், விசுக்தி ஆகாயத்துடனும் தொடர்பு கொண்டுள்ளன.