1600ம் ஆண்டுவாக்கில், தென் அமெரிக்க மலைப் பகுதியில் அடங்காத காய்ச்சலால் அவதியுற்று, தட்டுத் தடுமாறி நடந்து வருகிறார் பழங்குடி இனத்தவர் ஒருவர். காய்ச்சலுடன் சேர்த்து தாகமும் வாட்டி எடுக்க, தண்ணீர் தேடி அலைகிறார். கடைசியாக ஒரு குட்டையில் தண்ணீர் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து, அதைக் குடிக்கிறார். தண்ணீர் இனிப்பதற்கு பதிலாக கடுமையாக கசந்தது. அதற்கு காரணம், அந்தக் குட்டையின் நடுவில் இருந்த கொய்னா என்ற விஷ மரம் என்பதைக் கண்டு அதிர்ச்சியாகிறார்.
ஆனால், அதிர்ச்சி மெல்ல மெல்ல ஆனந்தமாக மாறியது. அவரது காய்ச்சல் குறைந்து உடல் சுறுசுறுப்பாகியது. இந்த விஷயம் அங்கு காட்டுத் தீ போல பரவ, அதன் பின் அந்த மரத்தையும், குட்டையையும் கடவுளாகவே மதிக்கத் தொடங்கி விட்டனர் பழங்குடியினர். அங்க்கு முகாமிட்டிருந்த சமய பிரச்சார அறக்கட்டளையின் மருத்துவர்கள், இதைக் கேள்விப்பட்டு மரத்தை ஆய்வு செய்தனர்.
மரப்பட்டையில் இருக்கும் ரசாயனம் காய்ச்சலை குணமாக்குவதை அவர்கள் அறிந்தனர். விடுவார்களா விஞ்ஞானிகள்... உடனே அந்த மரத்தின் பட்டைகள் ஆய்வு செய்யப்பட்டன. அதிலுள்ள குயினின் ரசாயனத்துக்கு, மலேரியாவை குணமாக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதை1631ம் ஆண்டு கண்டறிந்தனர்.
அன்று முதல், மலேரியாவுக்கு தடுப்பு மருந்தாக குயினின் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'மருந்தாகும் விஷம்' என்ற கூற்று, குயினின் விஷயத்தில் உண்மையாகியிருக்கிறது பார்த்தீர்களா?