விண்வெளி - செயற்கைக்கோள்
வானில் விமானம் பறக்க எரிபொருள் தேவை. ராக்கெட் உயரே செல்லவும் எரிபொருள் தேவை. ஆனால் ஓயாமல் பூமியைச் சுற்றிகொண்டிருக்கிற செயற்கைக் கோளுக்கு எந்த எரிபொருளும் தேவை இல்லை.
பூமியைச் சுற்றும் செயற்கைக் கோள்.
செயற்கைக் கோள் ஒரு முறை பூமியைச் சுற்றிவர பல்லாயிரம் கிலோமீட்டர் பறக்க வேண்டும். இப்படியாக அது பல்லாண்டுகள் பூமியைச் சுற்றி வருகிறது. செயற்கைக் கோள் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு, அதாவது பூமியின் ஈர்ப்பு விசையினால், சுற்றி வருகிறது. ஆகவே அதற்கு எரிபொருள் தேவையில்லை.
பூமியைச் சந்திரன் கோடானு கோடி ஆண்டுகளாகச் சுற்றி வருகிறது. சந்திரனில் எந்த எஞ்சினும் இல்லை, எரிபொருளும் இல்லை. சூரியனை பூமி சுற்றி வரவில்லையா, அது போலத்தான்.
ராக்கெட்டானது உயரே சென்று உரிய வேகத்தில் ஒரு செயற்கோளை விண்ணில் செலுத்திய பிறகு அந்த செயற்கைக்கோள் தன் பாட்டுக்கு பூமியைச் சுற்றி வருவதில் வியப்பு ஏதும் இல்லை.
உங்கள் வீட்டு அம்மிக் கல்லை இப்படி விண்வெளியில் செலுத்தினால், அதுவும் செயற்கைக் கோள் போல பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும். அம்மிக் கல்லைச் செலுத்துவதாக இருந்தாலும் சரி, நான்கு டன் எடை கொண்ட செயற்கைக் கோளைச் செலுத்துவதாக இருந்தாலும் சரி, ராக்கெட்டை ஒரே குறிப்பிட்ட வேகத்தில் ஏவினால் போதும். எடை அதிகரிக்க அதிகரிக்க மேலும் அதிகத் திறன் கொண்ட ராக்கெட் தேவை, அவ்வளவுதான்.
VIA-PRABHU